ராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 லட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று (26) வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து தலைமறைவான சந்தேக நபர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் வேதாளை மரைக்காயர் பட்டினம், மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
கடல் வழியாக நடக்கும் கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய சுங்கத்துறை, கடலோர காவல் படை, கடற்படை மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் அதையும் மீறி சமீப காலமாக அதிக அளவில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளர் கண்ணதாசனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குழு புது படத்திலிருந்து மானாங்குடி வரை உள்ள கடற்கரை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி கடற்கரை பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. அதை திறந்து சோதனை செய்த போது அதில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு சுமார் 1 கோடி 80 லட்சம் என்றும் சர்வதேச மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.