அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் 11 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 43 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சமும் உ.பி. முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த தீ விபத்தின்போது மருத்துவமனைக்கு வெளியே படுத்திருந்த யாகூப் மன்சூரி என்ற கூலித் தொழிலாளி மருத்துவமனை ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று கரும் புகைக்கு இடையே 7 பச்சிளம் குழந்தைகளை தூக்கி வந்து காப்பாற்றியுள்ளார்.ஆனால் இதே மருத்துவமனையில் பிறந்த யாகூப்பின் இரட்டை பெண் குழந்தைகள் மறுதினம் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று யாகூப் உருக்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார்.