10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று (25) நடைபெற்ற திசைமுகப்படுத்தல் செயலமர்வில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரினார்.
“எங்கே அமர வேண்டும் என்று கேட்டேன். அப்போது சொன்னார்கள் மறுபுறம் போய் உட்காருங்க. எந்த பிரச்சனையும் இல்லை டொக்டர், நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் அமருங்கள் என்று. பிறகு நாம் முன்னே சென்று அமர்ந்தோம்.எமக்கு கெம்பஸ் சென்று பழக்கம். கையை உயர்த்தி பாராளுமன்றத்துக்கு வரவில்லை. எங்கு வேண்டுமானாலும் போய் உட்காரலாம் என்று நினைத்தேன். அப்போது நாலு பேர் வந்து என்னுடன் பேசினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தினமும் உட்காரும் நாற்காலி இது என்று என்னிடம் வந்து சொன்னார்கள். பிறகு மற்றைய நாற்காலியில் உட்காரலாம் என்று நினைத்தேன். நான் 8வது நாற்காலியில் போய் உட்கார எந்த காரணமும் இல்லை.எல்லா ஊடகங்களிலும் என்னை புலி என்று அழைத்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் புலி ஒன்று வந்து அமர்ந்துள்ளது என்று. நான் வேண்டுமென்றே இப்படிப் போய் உட்காரவில்லை. எனக்குக் குரூப் இல்லை. நான் சுயேட்சையாக வந்தேன். அதனால் எங்கு உட்காருவது, எப்படி செல்வது என்று தெரியவில்லை.அவ்வாறு நான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மன்னிக்கவும். வேண்டுமென்றே அந்த நாற்காலியில் உட்கார நான் எதிர்பார்க்கவில்லை.