மேற்குகரையில் நேப்லஸிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க – துருக்கி யுவதி இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் கொல்லப்பட்டுள்ளார்.இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் அய்செனூர் எய்கி என்ற யுவதி கொல்லப்பட்டுள்ளார்.
அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவேளை தலையில் சுடப்பட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர்.பாலஸ்தீனத்தின் பெய்ட்டா கிராமத்திற்கு அருகில் இடம்பெறும் வாராந்த ஆர்ப்பாட்டங்களின் போது இவர் சுடப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதை இஸ்ரேலிய இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.படையினர் மீது கல்லை எறிந்து அவர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்திய வன்முறையை தூண்டிய முக்கிய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம்,இதன் காரணமாக வெளிநாட்டு பிரஜை கொல்லப்பட்டமை குறித்த தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.கொல்லப்பட்ட யுவதி சர்வதேச ஒற்றுமை இயக்கத்தின் தொண்டராக செயற்பட்டு வந்தார், பாலஸ்தீனிய ஆதரவு குழுவான இதன் தொண்டர் ஒருவர் 2003 இல் கொல்லப்பட்டார்.பாலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேல் புல்டோசர்களை பயன்படுத்தி அழிப்பதை தடுக்க முயன்றவேளை அவர் கொல்லப்பட்டார்.