உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கமைய ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களுக்கென வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அரசியல் கட்சிக்கு முன்பாக உள்ள கட்டத்தினுள் மாத்திரம் புள்ளடி (X) இட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.என்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்குச்சீட்டுனுள் எழுதுவது, வரைவது, பெயரை எழுதுவது, கிறுக்கவது, குறியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் மீறும் பட்சத்தில் அது நிராகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டாக கணிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் இன்று இடம்பெறுகிறது.வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகளும் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் கட்டாயமாக வருகைதர வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்கள் இன்றும் நாளையும் தொடர்புடைய தபால் நிலையத்திற்குச் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.