செம்மணிப் புதைகுழியில் நீல நிற புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4-5 வயதுடைய சிறுமியினுடைய என்புத் தொகுதி என சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினால் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.செம்மணி புதைகுழியில் இருந்து நீல நிறப் புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவரின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை 15ஆம் திகதிக்கு (நேற்று) முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா கடந்த 10ஆம் திகதி கட்டளை ஒன்றினை வழங்கியிருந்தார்.இந்நிலையில் நேற்று செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அந்த என்புத் தொகுதி தொடர்பான அறிக்கை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்தக் கோரிக்கையை மன்ற பரிசீலனைக்கு எடுத்தது. அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார்.ஆகவே 21ம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – என்றார். குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.