Home இலங்கை ‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்’ என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 6...

‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்’ என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 6 மணி நேரம் விசாரணை

0
'தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்' என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 6 மணி நேரம் விசாரணை

‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்’ என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை கடந்த வௌ்ளிக்கிழமை (21) பெற்றுள்ளனர்.

‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்..’ என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பு ஒன்றினையும் நடாத்தி அது போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். அந்நிலையில் கடந்த வாரம், ‘விகாரையை இடிக்க வாரீர்’ என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் யாழ். பிராந்திய ஊடகவியலாளர்களான கந்தசாமி பரதன், தம்பித்துரை பிரதீபன் ஆகிய 2 ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

2 ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டனர் பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது நீதிமன்றுக்கு சமூகமளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை, தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version