ஹட்டன் டிக்கோயா நகரத்தில் உள்ள கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள், வெதுப்பகங்கள் மற்றும் இறைச்சி கடைகள் இன்று (17) திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கேக்கில் ஈ மொய்த நிலையில் காணப்பட்டதை அடுத்து , பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.ஹட்டன் டிக்கோயா நகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் உள்ளூராட்சி வாரத்துடன் இணைந்து, அம்பகமுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பல பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்புடன் இந்த திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் முறையற்ற வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட வியாபார நிறுவனங்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றம் ஊடாக வழக்குகள் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அட்டன் டிக்கோயா நகரில் நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் இடையூறாக விற்பனை செய்த வியாபாரிகளையும் பொது சுகாதார பரிசோதகர்கள் வியாபாரத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.குறிப்பாக, வீதி மற்றும் பொது இடங்களில், உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது எனவும் அறிவிப்பு வழங்கப்பட்டது.