தமிழகத்தின் – திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் இறந்த நிலையில் கடல் பசுவொன்று கரை ஒதுங்கியுள்ளது. 8 வயது மதிக்கத்தக்க கடல் பசு ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் பசு, டொல்பின் உள்ளிட்டவை வலையில் சிக்குகிறது.அதனை உடனடியாக மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர்.இந்நிலையில் இன்று காலை சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை வைத்தியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இந்த கடல் பசு சுமார் 300 கிலோகிராம் எடை கொண்டது எனவும், அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ எனவும் தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.இந்த கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா அல்லது உடல் நிலை சரியில்லாமை காரணமாக உயிரிழந்ததா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.