யாழ்ப்பாணம் – குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் குடத்தனை மேற்கை சேர்ந்த தந்தை அவரது மகன் மற்றும் அவரது மருமகன் ஆகிய மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
படுகாயங்களுக்குள்ளான இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது கார் ஒன்றில் சென்றவர்கள் இவர்களை முந்திச் சென்றதுடன் தாறுமாறாக பயணித்துள்ளனர்.இதன்போது மோட்டார் சைக்கிளுடன் இடிபட்டதை அடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் இடம்பேற்றுள்ளது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் வன்முறை கும்பல் வாள்கள் சகிதம் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.இதன்போது வீட்டில் இருந்த தளபாடங்களை அடித்து உடைத்து சேதமாக்கியதுடன் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மூவர் படுகாயமடைந்தனர்.இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக வன்முறைக் கும்பலின் கட்டுப்பாட்டில் அந்த வீடு இருந்துள்ளது.இது தொடர்பில் மருதங்கேணி பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதிலும் வாள் வெட்டுக்குழு இரவு 11.00 மணிக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றபின்னரே தாமதமாக வந்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இவ்வாறான நிலையில் வன்முறை கும்பல் மீதான அச்சம் காரணமாக குறித்த குடும்பத்தினர் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து பொருட்கள், கால்நடைகள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு நேற்று இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.