போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான காவல்துறை அதிகாரிகளை உடனடியாகக் கண்டறிந்து பணிநீக்கம் செய்வது குறித்து காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முறையான திட்டம் தற்போது திட்டமிடப்பட்டுச் செயல்படுத்த தயாராகி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதாகச் சந்தேகிக்கப்படும் அதிகாரிகள், சோதனைக்காகக் காவல் நிலைய மருத்துவமனை மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.எதிர்காலத்தில், போதைப்பொருள் பயன்படுத்தும் அதிகாரிகளை அடையாளம் காணக் காவல் நிலைய மட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்குப் போதைப்பொருள் சோதனைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிடைத்த தரவுகளின்படி, காவல்துறையில் கணிசமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில், போதைப்பொருள் பாவனைக்காக சுமார் 100 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தலைமன்னார் காவல் நிலையத்தில் இணைக்கப்பட்ட ஒரு காவல் கான்ஸ்டபிள் நேற்று (18) நான்கு காவல்துறை அதிகாரிகளின் பைகளிலிருந்து ரூ.12,200 திருடியதற்காக மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.சந்தேகத்திற்குரிய காவல்துறை அலுவலர் போதைப்பொருள் பயன்படுத்துவதற்காகப் பணத்தைத் திருடியதாகத் தெரியவந்துள்ளது.மடு தேவாலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் சிறப்புப் பணியிலிருந்தபோது, கான்ஸ்டபிள் தனது சக காவல்துறை அதிகாரிகளிடமிருந்து பணத்தைத் திருடியதாகக் கூறப்பட்டது.