Home » இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலை

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலை

by newsteam
0 comments
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலை
10

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரியான பிரதீப்குமார் பண்டார, கடந்த 2020.09.05ஆம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.விசாரணையில் கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டார கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிஸார் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர்.விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டாரே ஒத்துக்கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள், அதனையடுத்து திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார். அவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையும் செலுத்தினார்.சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் பொலிஸ் மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version