இலங்கை நாடாளுமன்ற உணவகத்தில் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் இருப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன எடுத்துரைத்துள்ளார்.நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்த அவர், நாடாளுமன்ற கட்டடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டதிலிருந்து, வளாகத்திற்குள் உணவு தயாரிப்பு நிலைமைகளை சரிபார்க்க எந்த பொது சுகாதார பரிசோதகர்களோ (PHI) அல்லது சுகாதார அதிகாரிகளோ அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.
“கடந்த ஏப்ரல் மாதம், நாடாளுமன்ற வளாகத்திற்குள் உணவு பாதுகாப்பு நிலைமையை ஆய்வுசெய்யுமாறு பத்தரமுல்லை சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதார அதிகாரிகளை நான் கேட்டுக் கொண்டேன், அவர்கள் எனக்கு ஒரு அறிக்கையை வழங்கினர்,” என்று அவர் கூறினார்.இந்த ஆய்வில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு சேர்க்கைகள், எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் எச்சங்கள், உடைந்த தரை மற்றும் சேதமடைந்த சமையல் பாத்திரங்கள் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.“இந்த அறிக்கை இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை, ஆனால் அது எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.பிரச்சினையின் தீவிரத்தை எடுத்துரைத்த சபாநாயகர், சட்டமூலமொன்றை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும் ஒரு முக்கியமான நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணவு விஷமடைந்து பாதிக்கப்பட்டால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரித்தார்.இந்தப் பிரச்சினைகள் குறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, அதிகாரிகள் எங்கள் மீது அதிருப்தி அடைகிறார்கள்.சிலர் என்னை பொது சுகாதார பரிசோதகர் என்று கூறி கேலி செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.