Home இலங்கை சிந்துஜாவின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுகிறது

சிந்துஜாவின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுகிறது

0
சிந்துஜாவின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுகிறது

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த வாரம் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீனத்தால் மரணம் அடைந்த மன்னார் தம்பனைக் குளத்தை சேர்ந்த இளம் தாயின் மரணம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்பபடுவதாகவும் குற்றம் இளைத்தவர்களை காப்பாற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.இவ் விடயம் தொடர்பாக அவர் இன்று (09) மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,சிந்துஜாவின் மரணம் நிகழ்ந்து ஏறக்குறைய 11 நாட்கள் நிறைவுற்றுள்ளது. இன்னும் பூர்வாங்கமான அறிக்கை வெளிவரவில்லை. ஆனால் அவர்கள் விசாரணைகளை வேறு கோணத்தில் திசை திருப்புவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

மன்னார் வைத்திய சாலையின் விசாரணை அறிக்கையும், பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் அறிக்கையும், கள அறிக்கையும் ஒரு விடயத்தை செல்ல மாகாண சுகாதார அமைச்சின் விசாரணை இன்னொரு விதமாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மாகாண சுகாதார அமைச்சின் அறிக்கையில் இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்களை அல்லது சம்மந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்க கூடியவர்களை அதிகார மிக்கவர்களை காப்பாற்றுவதாக அமைந்துள்ளதாக நம்ப தகுந்தவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள், இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட ஒரு வைத்தியரையும் தண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே விசாரணைகள் ஒரு குறுகிய அளவிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது சம்பந்தப்பட்டவர்களை இடைநீக்கம் செய்யாது வெறுமனே இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் வைத்தியசாலை தரப்பாலும் மாகாண சுகாதார அமைச்சாலும் இடம்பெறுவதாகவும் சம்பந்தப்பட்ட 5 நபர் களுக்கும் இன்றைய தினம் இடமாற்றம் வழங்கப் படவுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.நீதியான விசாரணை செய்வதாக மக்களுக்கு கூறிவிட்டு சாதாரண இடமாற்றத்தை யே செய்வதாகவும் நீதியான விசாரணை இடம் பெறவில்லை என்றும் எனவே நீதியான விசாரணை இடம் பெற வேண்டும் என்பதுடன் குற்றமிழைத்தவர்கள் வைத்திய துறையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என பொது அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.அதை விடுத்து சாதாரண இடமாற்றம் என்பதை பொது அமைப்புக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவதில்லை என்பதுடன் இவ்வாறு செய்தால் இவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள எங்களை வைத்திய தரப்பினர் நிர்பந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.தொடர்ச்சியாக நாங்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதார துறையினரிடம் பேசி வருகிறோம். இந்த மரணம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பிலும் பேசியிருக்கிறோம்.நீதி வழங்குவதில் இருந்து நீங்கள் பின் வாங்கினால் வைத்திய சாலைக்கும், மாகாண சுகாதார அமைச்சுக்கும் எதிராக எங்கள் செயற்பாடுகள் இருக்கும் என்பதை தெளிவாக உரியவர்களிடம் தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version