Home இலங்கை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

0
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இதன்போது, முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். சபாநாயகரினால் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், இதனை பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேற்கொண்டு வைப்பார். இவ்வாறு பதவிச்சத்தியம் செய்துகொண்ட சபாநாயகர் அக்கிராசனத்தில் அமர்வதற்கு முன்னர் தான் தெரிவுசெய்யப்பட்டமைக்கு நன்றிதெரிவித்து சிறியதொரு உரையாற்றுவதும் சம்பிரதாயமாகும். தெரிவுசெய்யப்பட்ட புதிய சபாநாயகருக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், சபாநாயகரும் நன்றி தெரிவித்து உரையாற்றுவார். அதன் பின்னர் சபா மண்டபத்திலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை எடுத்துக்கொள்வர்.இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர், குழுக்களின் தவிசாளர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய பதவிகளுக்கான உறுப்பினர் தெரிவு இடம்பெறவுள்ளது.
முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். செங்கோல் சபா மண்படத்தில் வைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவது விடயமாக சபையில் முன்னெடுக்கப்படும்.

காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் கூட்டத் தொடரையடுத்து முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அரசியலமைப்பில் 33 (அ) உறுப்புரையின் படி பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பிப்பதற்கும் அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரைக்கு இணங்க பாராளுமன்றத்தில் வைபவ ரீதியான அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார். பத்தாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது அமர்வை மிக எளிமையான முறையில் நடத்துவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version