அடுத்த வாரம் முதல் 450 கிராம் பாண் ஒரு இறாத்தால் 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படாவிட்டால், பாணுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டுவர வேண்டியிருக்கும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.சிறிய கடைக்கு 1 இலட்சம் ரூபாவும், ஒரு நிறுவனம் அல்லது தொழிற்சாலைக்கு 5 இலட்சம் முதல் 50 இலட்சம் ரூபா வரையும் அபராதம் விதிக்க முடியும் என சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்தார்.பாணுக்கு நிலையான விலை இல்லை என்றும் சில பாண்கள் உரிய நிறையில் இல்லை என்றும் நுகர்வோர் உள்ளிட்ட தரப்பினர் அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தனர்.அதன்படி, நுகர்வோர் விவகார அதிகார சபை இது தொடர்பாக அவ்வப்போது சோதனை நடத்தியது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி, பாணின் நிறை குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.ஒரு இறாத்தல் பாணின் குறைந்தபட்ச எடை 450 கிராமும் அரை பாணின் குறைந்தபட்ச எடை 225 கிராமும் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் இறாத்தலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.