ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா சீனா மெக்சிக்கோ ஆகியநாடுகளில் இருந்து வரும் பொருட்களிற்கான வரிகளை அதிகரிப்பேன் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பதவியேற்ற முதல்நாளே இதனை செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க எல்லைக்கு அப்பாலிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றம்,குற்றங்கள் போதைப்பொருட்களிற்கு எதிரான பதிலடியாகவே இதனை செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது முதலாவது உத்தரவு கனடா மெக்சிக்கோவிற்கு எதிராக 25 வீத வரியை விதிப்பதாக காணப்படும் என தெரிவித்துள்ள டிரம்ப், இந்த நாடுகளில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் வருகின்ற அனைத்து பொருட்களிற்கும் இந்த வரிவிதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.போதைப்பொருட்களும் சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அமெரிக்காவிற்குள் வருவது நிறுத்தப்படும்வரை இந்த வரிகள் நீடிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் அயலவர்களால் நீண்டகாலமாக காணப்படும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காணமுடியும் என தெரிவித்துள்ள டிரம்ப் சீனா பொருட்கள் மீது தற்போதுள்ளதை விட பத்துவீத வரியை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.சீனா அமெரிக்காவிற்குள் சட்டவிரோத போதைப்பொருட்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தும்வரை இது தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களின் செலவுகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.