சீனாவின் வடமேற்கே தியான்ஷூய் நகரில் ஹெஷி பெய்க்சின் என்ற பெயரில் அமைந்த தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுக்கான உணவில், உணவு பொருட்களுக்கு பதிலாக பெயிண்ட் கலந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.குழந்தைகளின் உணவு, பார்ப்பதற்கு வண்ண மயத்தில் தோன்ற வேண்டும் என்பதற்காக சமையல் பணியாளர் இதனை செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால், பெயிண்டில் இருந்த காரீயம் என்ற உலோகத்தின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால், ரத்தத்தில் அது கலந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மொத்தம் 251 மாணவ மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் 233 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களில் 201 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் தொடர்ந்து தாக்கம் ஏற்படுத்த கூடிய ஒன்றாகும் என மருத்துவ மதிப்பீட்டில் இருந்து தெரிய வந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இதுபோன்று நடந்து வந்திருக்க கூடும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவாக வழங்கப்பட்ட கேக் மற்றும் மக்கா சோளத்தில் செய்யப்பட்ட கார்ன் ரோல் ஆகியவற்றில் அதிக அளவிலான காரீயம் கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சீனாவில், 2008-ம் ஆண்டில் பால் பவுடரில் மெலமைன் என்ற ஆலை கழிவு பொருள் கலந்து, அதனால் 6 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, முக்கிய அதிகாரிகளை அதற்கு பொறுப்பேற்க செய்து, அவர்களுக்கு சீனா மரண தண்டனையை பரிசாக அளித்தது.இந்த விவகாரத்தில், பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், வருவாயை கூட்டவும் இதுபோன்ற வண்ணமய உணவை தயாரிக்க பள்ளி முதல்வர் மற்றும் பள்ளியின் உரிமையாளர் முடிவு செய்திருந்தது முதல்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. தியான்ஷுய் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.