மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இன்று பிற்பகல் அளவில் குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள குளக்கட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது பாம்பு தீண்டியதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த திருநீற்றுக்கேணியில் நீண்ட காலமாக பாம்புகள் இருப்பதாக தெரிவிக்கும் கிராமவாசிகள், முதலைகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
யோகராசா தில்லைவாசகம் என்னும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான 38 வயது நபரே இவ்வாறு பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் . மரணமானவரின் சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.