யாழ்ப்பாணத்தில் சக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக பெருமளவான பணத்தினை பெற்று மோசடி செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு, சக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 14 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.மூன்று வருட காலமாகியும் வெளிநாட்டுக்கு தன்னை அனுப்பி வைக்காது மோசடி செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் முறைப்பாடு செய்ததை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பணத்தினை பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்துள்ளனர்.பொலிஸ் உத்தியோகஸ்தரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.