வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் மற்றும் பிற கட்டிடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இராணுவ புலனாய்வு சபையின் பொறுப்பில் உள்ள தங்க நகைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைக்கு அனுப்பி ஆய்வு செய்து அறிக்கையை அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவுவைப் பிறப்பித்தார். பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதவான், இந்த விசாரணைகளுக்குக் கோரப்பட்ட வேறு பல உத்தரவுகளையும் பிறப்பித்தார்.