விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜூனில் சராசரி விலை அதிகரித்தமையால் ஜூலையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜூலையில் சராசரி விலை குறையும் பட்சத்தில், ஆகஸ்ட்டில் விலை குறைவடையும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,எரிபொருள் களஞ்சியசாலை தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு தெரியும். அதற்கமைய எரிபொருள் கையிருப்பு தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடகவியலாளர் மாநாட்டிலும், ஊடக அறிக்கை ஊடாகவும் தெரியப்படுத்தியிருக்கின்றார்.
கடந்த வாரம் இது குறித்து எம்மிடம் கேட்கப்பட்ட போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் அடுத்த இரு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு காணப்பட்டது.அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருட்களை கொள்வனவு செய்து அவற்றை பதுக்க ஆரம்பித்தனர். எனினும் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை. எதிர்வரும் இரு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பிலுள்ளது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த மாதத்துக்கான எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய கணிப்பிடப்படும். ஜூலை மாத எரிபொருள் விலைக்காக ஜூன் 30ஆம் திகதி கணிப்பீடு இடம்பெற்றது. ஜூன் மாதத்தில் காணப்படும் எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டே ஜூலை மாதத்துக்கான விலையும் தீர்மானிக்கப்படும். மாறாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதத்துக்கான விலை தீர்மானிக்கப்படுவதில்லை.
விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜூனில் சராசரி விலை அதிகரித்தமையால் ஜூலையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஜூலையில் சராசரி விலை குறையும் பட்சத்தில், ஆகஸ்ட்டில் விலை குறைவடையும். கடந்த காலங்களில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றிருக்காவிட்டால் தற்போது மக்களுக்கு எரிபொருள் விலைகளில் நிவாரணங்கள் வழங்கியிருக்க முடியும்.
எரிபொருள் விலை, மின் கட்டணம் என்பன அதிகரிக்கும் வேகத்தில் ஏனைய சேவைகளுக்கான கட்டணங்களும் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் விலைகள், சேவைக் கட்டணங்கள் குறையும் போது பொருட்களின் விலைகள் குறைவடைவதில்லை. எனவே அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்கு ஏதேனுமொரு வகையில் நிவாரணத்தை வழங்க முடியுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.
பொருட்களின் விலைகள் மற்றும் சேவை கட்டண விவகாரத்தில் அனைத்திலும் அரசாங்கத்தால் தலையிட முடியாது. எனவே அந்தந்த துறையினர் அவற்றில் அவதானம் செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கொருமுறை பேரூந்து கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜூன் 30 நடைமுறைப்படுத்தப்படவிருந்த பேரூந்து கட்டண திருத்தத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பால் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் கட்டண குறைப்பு போதுமானதல்ல என்றார்.