ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுள்ள யாருக்கும் தமது ஆட்சியில் பதவி வழங்கப்படமாட்டாது என தெரிவித்துஆட்சிக்கு வந்த அரசாங்கம், நிதி மோசடி தொடர்பில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினையாகும் என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
காெழும்பில் நேற்று (18) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கேள்விக்கோரல் செயற்பாட்டில் நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுவருகின்றன.அமைச்சர் குமார ஜயகொடி உர கூட்டுத்தாபனத்தில் பணிபுரிகின்ற காலத்தில் அவருக்கு எதிராக 80 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.அந்த விசாரணையில் அவரை குற்றவாளியாக்கியதுடன் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கும் அப்போதைய பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்டது.தற்போது இதுதொடர்பில் பாரியளவில் பேசப்படுகின்ற நிலையில், அமைச்சர் குமார ஜயகொடி தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் நாங்கள் அவதானித்து வருகிறோம்.
நிதி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கொன்றில் தான் குற்றவாளிக்கப்பட்டதை அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது அதனை அவர் ஏற்றுக்கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம். அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.ஊழல் மோசடி தொடர்பில் குற்றவாளிக்கப்பட்ட அல்லது அவ்வாறான விடயத்துக்கு குற்றச்சாட்டுள்ள யாருக்கும் ஆட்சியில் பதவி வழங்கப்படமாட்டாது என்றே தேர்தலுக்கு முன்னர் இவர்கள் தெரிவித்தார்கள்.அவ்வாறு தெரிவித்த அரசாங்கம் ஒன்று, நிதி மோசடி தொடர்பில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது தொடர்பில் எங்களுக்கு பாரிய பிரச்சினை இருக்கிறது. அதேபோன்று இந்த அரசாங்கம் வித்தியாசமான அரசியல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.அதுதான் அரசாங்கம் செயற்படுத்தும் கொள்கைகள், எடுக்கப்படும் அரசியல் தீர்மானங்கள் எதனையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தாமல் இருப்பதாகும். அதன் முறையிலேயே அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்காமல் இருக்கிறது என்றார்.