அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என்ற பரஸ்பர வரியை விதித்தார். இந்த வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்தது. இதனால் கோபம் அடைந்த டிரம்ப், சீனாவுக்கு எதிராக 145 சதவீதம் வரியை விதித்தார். இப்படி இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்திக் கொண்டே போன நிலையில், தற்போது வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் எனத்தெரிகிறது.அமெரிக்காவும் – சீனாவும் பரஸ்பர வரிகளை 90 நாட்கள் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளன. சீன அதிகாரிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இரு நாடுகளும் வரிகளைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது