இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனை அடிப்படையாக கொண்டு மதுபான கையிருப்பு குறித்து மதுவாரி திணைக்கள அதிகாரிகளால் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது 802 மது போத்தல்களின் விற்பனை தொடர்பில் தகவல்கள் இல்லாத காரணத்தால் மதுபான சாலை உரிமையாளரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்போது, மதுபோத்தல்களை திறந்து விட்டு எலி மதுவை குடித்துவிட்டதாக மதுபான சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தில் மதுபான சாலை உரிமையாளர் பொய் சொல்வதாகக் கூறி அதிகாரிகளால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஜார்க்கண்டில் எலிகள் போதைப் பொருள் திருடியதாகக் குற்றம் சாட்டப்படுவது இது முதன்முறையல்ல.இதற்கு முன்னதாகவும் 10 கிலோ பாங்கு மற்றும் 9 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.