கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியை சேர்ந்த தம்பதி அஷ்ரப்-சஜினா. இவர்களது மகள் ஹன்னா பாத்திமா. 11 வயது சிறுமியான அவள், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.
சிறுமியின் வீட்டில் ஒரு பூனை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று அந்த பூனையின் நகம் பட்டு சிறுமி ஹன்னா பாத்திமா காயமடைந்தார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறுமிக்கு ரேபிஸ் தடுப்பூசி முதல் தவணை அடூர் தாலுகா ஆஸ்பத்திரியில் போடப்பட்டது.
பந்தளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமிக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு வீடு திரும்பிய சிறுமி ஹன்னா பாத்திமாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமி மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.அங்கு உடல்நிலை மேலும் மோசமானதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டாள். அங்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சிறுமி ஹன்னா பாத்திமா திடீரென இறந்தாள். பூனையின் நகக்கீறலுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், சிறுமி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ரேபிஸ் பாதித்து அவர் இறந்திருக்கக்கூடும் என்ற கருதப்படுகிறது. ஆனால் பூனையின் நகக்கீறல் காரணமாக சிறுமி இறந்திருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே டெங்கு அல்லது நிபா பாதிப்பு காரணமாக சிறுமி ஹன்னா பாத்திமா இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.