தாய்லாந்தின் சுவர்ணபுமி விமான நிலையத்தில் மலைப்பாம்புக்களை தமது உள்ளாடையில் மறைத்து கடத்த முயன்றதாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தமது உள்ளாடையில் மூன்று மலைப்பாம்பு குட்டிகளை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.செஹான் என்று அடையாளம் காணபட்ட அவர், தாய் ஏர்வேஸ் விமானத்தில் நள்ளிரவு 12.06 மணிக்கு பேங்கொக்கிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் அவர் மீது சந்தேகம் கொண்ட வானூர்தி நிலைய அதிகாரிகள், கதிரியக்க கருவிகளை பயன்படுத்தி சோதனைக்கு உள்ளாக்கியபோது, அவரின் உடமைகளில் இருந்து எதனையும் கண்டறிய முடியவில்லை.இதன்பின்னர் அதிகாரிகள் அவரை உடல் சோதனைக்கு உள்ளாக்கியபோது, அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆபிரிக்காவின் சிறிய ரக மூன்று மலைப்பாம்புகள் மீட்கப்பட்டன.இதனையடுத்து அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.குறித்த இலங்கையர் ஏற்கனவே 2024 ஆம் ஆண்டும் இலங்கையில் வனவிலங்கு சட்டத்தின்கீழ் கைது செய்யபட்டவர் என்று சௌத் சைனா மோனிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.