ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது காலம் மாறிவிட்டது. அதிலும் ஆண்ட்ராய்டு போன்கள் வந்த பிறகு பேசுவதற்கு மட்டும் இன்றி பொழுதுபோக்கு சாதனமாகவே செல்போன்கள் மாறிவிட்டன. உள்ளங்கைக்குள் உலகம் ஒன்று சொன்னது தற்போதுதான் 100 சதவீதம் பொருந்துகிறது என நினைக்கும் அளவுக்கு ஸ்மார்ட்போன்களில் பார்த்துவிட முடிகிறது. ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதளங்கள் முன்னிலை வகிக்கின்றன.உலகின் பெரும்பாலான ஸ்மார்ட்போன் சந்தையை இந்த இரு இயங்குதளங்களே கட்டுப்பாட்டில் வைத்து இருக்கக்கூடிய நிலையில், அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளுக்காக தோன்றும் முகப்புப் பக்கம் மாறியிருக்கிறது. Caller Interface என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த முகப்பு மாறியிருப்பது ஆண்ட்ராய்டு பயனர்கள் பலரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது. அழைப்புகள் வந்தால் ஏற்பதற்கு மேலே ஸ்வைப் செய்யும் முறை இருந்தது, தற்போது பக்கவாட்டில் ஸ்வைப் செய்வது போன்று மாறியிருக்கிறது. இந்த புதிய வசதியால் அழைப்புகள் வரும் போது எப்படி அதை ஏற்பது என தெரியாமல் குழம்பிப்போவதாக நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.