மேற்கு வங்கத்தின் மேற்கு மெடினிபூர் மாவட்டத்தில் பன்சுரா பகுதியில் உள்ள கோசாய் பியர் பஜாரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த சம்பவம் நடந்தது.காவல்துறையினரின் கூற்றுப்படி, ஏழாம் வகுப்பு மாணவரான கிருஷ்நேந்து தாஸ், சிப்ஸ் பாக்கெட் வாங்க உள்ளூர் கடைக்குச் சென்றான். கடை உரிமையாளர் சுபாங்கர் தீட்சித் அந்த நேரத்தில் அங்கு இல்லை.இறந்தவரின் தாய் கண்ணீருடன் போலீசாரிடம் கூறுகையில், “மாமா, நீங்கள் சிப்ஸ் எடுத்து தருகிறீர்களா?” என்று கிருஷ்ணேந்து கடைக்காரரை பலமுறை கூப்பிட்டதாக கூறினார். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை, அதனால் சிறுவன் சிப்ஸ் பாக்கெட்டுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.சிறிது நேரத்தில் கடைக்குத் திரும்பிய உரிமையாளர் தீட்சித், சிறுவனைத் துரத்திச் சென்று பிடித்தார். அவன் எல்லோர் முன்னிலையிலும் கிருஷ்நேந்துவை கன்னத்தில் அறைந்து காலால் உதைத்தார். பின் அவனை அனைவர் முன்னிலையிலும் தோப்புக்கரணம் போட வைத்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த சிறுவனின் தாயாரும் சிறுவனை திட்டி, அடித்தார்.
கடையின் முன் கிடந்த சிப்ஸ் பாக்கெட்டை மட்டும் தான் எடுத்துக் கொண்டதாகவும், அதற்கு பணம் செலுத்த இருந்ததாகும் சிறுவன் கூறினான். ஆனால் கடைக்காரர் அவரை நம்பவில்லை, அவன் பொய் சொன்னதாக குற்றம் சாட்டினார்.இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்து அவமானப்படுத்தப்பட்ட கிருஷ்நேந்து தனது தாயுடன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான். நீண்ட நேரமாகியும் கிருஷ்நேந்து வெளியே வராததால், அவரது தாயார் சந்தேகமடைந்து, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு கிருஷ்நேந்து மயக்கத்தில் வாயில் நுரை தள்ளியபடி கிடப்பதைக் தாய் கண்டார்.சிறுவனுக்கு அருகில் பாதி காலியான பூச்சிக்கொல்லி டப்பாவும், அவன் வங்காள மொழியில் எழுதிய ஒரு கடிதமும் இருந்தன.
“அம்மா, நான் திருடன் இல்லை. நான் எதையும் திருடவில்லை. நான் சென்றபோது மாமா (கடைக்காரர்) அங்கு இல்லை. திரும்பி வரும் வழியில் சாலையில் ஒரு குர்குரே பாக்கெட் இருப்பதைக் கண்டு அதை எடுத்துக்கொண்டேன்.எனக்கு குர்குரே மிகவும் பிடிக்கும். இவைதான் என் கடைசி வார்த்தைகள். என்னை மன்னியுங்கள்” என்று அந்தக் கடிதத்தில் சிறுவன் கிருஷ்ணேந்து எழுதியிருந்தான். கிருஷ்ணேந்து தம்லுக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டான்.ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் கடை உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார்.