வட – கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான நடவடிக்கையின் போது இராணுவத்தினரால் மீட்கப்பட்ட, பத்தாயிரம் தங்கப் பொருட்களில் 6 ஆயிரம் பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (22) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்தது.முந்தைய விசாரணையின்போது, இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10 ஆயிரம் தங்கப் பொருட்களை பரிசோதித்து அதில் உள்ள தங்கத்தின் அளவு மற்றும் எடை குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்துக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நகல்களுடன் சமர்ப்பிக்குமாறு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையால் பரிசோதிக்கப்பட்ட 6 ஆயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் இன்று அழைக்கப்பட்டபோது சமர்ப்பணங்களை முன்வைத்து குறித்த அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.